சிறப்புக் கட்டுரைகள்

பக்கவாதத்தை குணப்படுத்தும் பயிற்சிகள்

Published On 2023-09-08 11:26 GMT   |   Update On 2023-09-08 11:26 GMT
  • பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் உணவு ஆலோசகர் கைகோர்க்கும் பட்சத்தில் ஒரு பக்கவாத நோயாளி முழுமையாக குணம் பெற்று அந்த பாதிப்பில் இருந்து நிச்சயம் மீண்டு விடுவார்.
  • பக்கவாதம், நீரிழிவு உள்ளவர்கள் அதிகம் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பக்கவாதம் ஒரு மனிதனை முழுமையாக முடங்கிப்போகச் செய்யும் மிகவும் ஆபத்தான ஒரு நோய். முன்பெல்லாம் பக்கவாதம் வந்தவுடன் ஆயுள் முழுவதும் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது பக்கவாதம் வந்தவர்கள் பல்வேறு பயிற்சிகளுக்கு பிறகு இயல்பான வாழ்க்கை வாழ வழி ஏற்பட்டுள்ளது.

பக்கவாதம் எதனால் வருகிறது? அதன் பாதிப்புகள் என்ன? அதற்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்பது பற்றி ஏற்கனவே கூறி இருக்கிறேன். இன்று பக்கவாத நோயாளியை மீட்டுக் கொண்டு வந்து அவருக்கு எப்படி மறுவாழ்வு அளிப்பது என்பதை பற்றி சொல்கிறேன்.

பக்கவாதம் பாதித்தவர்களுக்கு மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்து அவருக்கு ஏற்பட இருக்கும் அடுத்தக்கட்ட பாதிப்பை தடுத்து விடுவார். பின்னர் அந்த பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வர மருத்துவர் அளிக்கும் மருந்தால் மட்டும் முடியாது. பிசியோதெரபிஸ்ட் அளிக்கும் பயிற்சிகள் பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும். நோயாளிகளுக்கு உடனடியாக கொடுக்கப்படும் சிகிச்சையை விட பிறகு அவர்களுக்கு அளிக்கப்படும் பிசியோ தெரபி பயிற்சியே நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடற்பயிற்சி மட்டும் அல்லாமல் பேசும் பயிற்சி, கை, கால்களை அசைக்க பயிற்சி, நடக்கும் பயிற்சி என பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கென தனித்தனியாக பயிற்சி நிபுணர்கள் உள்ளனர். மருத்துவர்களுடன், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் உணவு ஆலோசகர் கைகோர்க்கும் பட்சத்தில் ஒரு பக்கவாத நோயாளி முழுமையாக குணம் பெற்று அந்த பாதிப்பில் இருந்து நிச்சயம் மீண்டு விடுவார்.

ஒரு பக்கவாத நோயாளிக்கு என்ன மனதில் ஓடிக் கொண்டிருக்கும் என்றால் அவரே அவரது வேலையை செய்ய வேண்டும். அவரே அவர் கையால் சாப்பிட வேண்டும். அவரே வண்டி ஓட்ட வேண்டும். இவையெல்லாமே அவரது மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். இதையெல்லாம் தான் பக்கவாதமானது தடுமாறச் செய்து விடுகிறது. இந்த சூழ்நிலையில் நரம்பியல் நிபுணர் பக்கவாதத்துக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உயிரை காப்பாற்றி விடுகிறார். அடுத்து பிசியோ தெரபிஸ்ட் நோயாளியை நடக்க வைப்பார்கள். இயங்காத கை, கால்களை இயங்க வைப்பார்கள். சரியாக அமர வைப்பார்கள். நோயாளிகளுக்கு மேற்கொண்டு இந்த பக்கவாதத்தின் தாக்கம் மோசமாவதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வார்கள். 2-வதாக நிறைய பேருக்கு பேச முடியாது. விழுங்க முடியாது. இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களை பேச வைப்பதற்கும், அவர்கள் சாப்பிடுகின்ற உணவை விழுங்க வைப்பதற்கும் பிசியோதெரபிஸ்ட் வேலை மிக முக்கியம்.

பக்கவாத நோயாளிகளை மீட்டுக் கொண்டு வருவதில் மன நல மருத்துவர்களின் பங்கும் உள்ளது. பக்கவாத நோயாளிகள் மனதளவில் நொந்து போய் இருப்பார்கள். எனவே அவர்களிடம் பேசி இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. நிச்சயமாக நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இதில் இருந்து வெளியே வந்து உங்களை பார்த்துக் கொள்ள முடியும். உங்களை நீங்களே பார்த்துக் கொள்ள முடியும் என்பதை மனநல மருத்துவர்கள் புரிய வைப்பார்கள்.

நிறைய பேர் என்ன சொல்வாங்கன்னா, நிறைய சாப்பிடுங்க, ஏதாவது சாப்பிடுங்க என சொல்லி வற்புறுத்துவார்கள். அப்படி அவர்களை வற்புறுத்தக் கூடாது. அந்த சூழ்நிலையில் நோயாளிக்கு சரியான அளவில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்பு கிடைக்கும்படியான உணவுகளை வழங்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு எது என்பதை யெல்லாம் பார்த்து அவர்களது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி அவர்களது உணவை கட்டுப்படுத்தி, வகைப்படுத்தி வழங்குவது உணவு ஆலோசகரின் பணியாக உள்ளது. பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாங்கள் இந்த முறையைத் தான் கடைபிடிக்கிறோம்.

பிசியோதெரபிஸ்ட் அளிக்கும் சில பயிற்சிகளை சொல்கிறேன்.

நாம் எந்தவொரு செயலை செய்ய வேண்டும் என்றாலும் கை வலுவானதாக இருக்க வேண்டும். அந்த கையை இயக்கும் மையமாக தோள்பட்டை இருக்கிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் தசைகள் பலவீனமாகி தோள்பட்டை இறங்க வாய்ப்புள்ளது. இதை முன்கூட்டியே அறிந்து கொண்டு பிசியோதெரபிஸ்டுகள் பயிற்சி கொடுத்து தோள்பட்டை இறங்க விடாமல் தடுக்கிறார்கள்.

பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்களில் பலர் எப்போதும் படுத்த நிலையிலேயே இருப்பார்கள். எப்போதும் படுத்த நிலையிலேயே இருந்தால் படுக்கை புண் வரவாய்ப்புள்ளது. அவ்வாறு படுக்கை புண் ஏற்படுவதை தடுக்க பிசியோதெரபிஸ்ட் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை திரும்பி, திரும்பி படுக்க ஆலோசனை வழங்குவார்கள். அடுத்து படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வைப்பது, சேரில் அமர வைப்பது, அடுத்து கொஞ்சம் நடக்கச் சொல்வது போன்ற பயிற்சிகளை அளிப்பார்கள். இந்த பயிற்சிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அளிக்கப்படுவது கிடையாது. நோயாளியின் உடல் நிலை முன்னேற்றத்தை பொறுத்து படிப்படியாக இந்த பயிற்சிகளை அளிப்பார்கள். இதில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், கைகள் செயல்பாடு மற்றும் தசைகள் வலுவடைவதற்கான பயிற்சிகளை தருவார்.

அடுத்து உணவு ஆலோசகரின் பங்களிப்பு பற்றி பார்க்கலாம். பக்கவாதம் வந்தவர்களுக்கு கை, கால், வாய் ஆகியவற்றின் செயல்பாடு இல்லாமல் இருக்கும். அவர்களின் தசைகள் பலகீனமாக இருக்கும். உடலில் இரும்புச்சத்து, தேவையான உயிர்ச்சத்துக்கள் குறைவாக இருக்கும். மேலும் மலச்சிக்கலும் சேர்ந்து அவர்களை பாடாய்படுத்தும்.

அந்த சமயத்தில் உணவு ஆலோசகரின் ஆலோசனைகள் படி உணவு உட்கொண்டோம் என்றால் உடலுக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும்.

நாம் எப்போதுமே அரிசி தான் சாப்பிடுகிறோம். எனவே அதனை தவிர்க்க வேண்டாம். ஏதாவது ஒரு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற 2 நேரமும் கண்டிப்பாக சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ராகி, கம்பு, சோளம் போன்றவை இருந்தால் சிறப்பானதாக இருக்கும். நோயாளிகளின் தசை பலகீனமாக இருப்பதால் அதனை வலுப்படுத்த கண்டிப்பாக புரதச்சத்து அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்பு, பயிறு போன்றவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சோயா மற்றும் அதில் தயாரிக்கப்படும் பொருட்களில் புரதச்சத்து உள்ளது. காளானிலும் புரதச்சத்து இருக்கிறது. எனவே தினமும் ஏதாவது ஒரு பருப்பு அல்லது பயிறை வேகவைத்தோ சாப்பிடலாம். சுண்டலை தாளித்த முறையிலோ எடுத்துக் கொள்ளலாம்.

ரத்தக்கொதிப்பு இருக்கும் நோயாளிகள் கண்டிப்பாக உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது. நாம் சாதாரணமாக சாப்பிடும் உணவிலேயே போதுமான உப்பு இருக்கும். காலையில் இருந்து சாப்பிடுகிற சாம்பார், குழம்பு, ரசம், பொறியல் என எல்லா உணவுகளிலும் உப்பு சேர்க்கப்படுகிறது. அதுவே நமக்கு போதுமானவை. முடிந்தளவு இதில் எல்லாம் உப்பை சேர்த்து விட்டு சாதத்தில் உப்பு போடுவதை தவிர்த்துக் கொள்ளலாம். உப்பில் ஊற வைத்த கருவாடு, சிப்ஸ், பீசா, பர்கர், பப்ஸ் போன்றவற்றில் வழக்கமான அளவை விட அதிக அளவு உப்பு சேர்ப்பார்கள். நிறைய கெமிக்கல்சும் சேர்க்கப்படும். இவை அனைத்துமே உப்பாகத்தான் மாறும். இதனால் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பக்கவாதம், நீரிழிவு உள்ளவர்கள் அதிகம் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் வேகவைத்த காய்கறியோ, அல்லது பொறியலோ எடுத்துக் கொள்ளலாம். மதியம் 2 காய்கறிகளோ அல்லது கீரை எடுத்துக் கொள்ளலாம். தினமும் எதாவது ஒரு கீரை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த கீரைகள் அதிகம் எடுக்கும் போது நமக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. இரும்புச்சத்தும் கிடைக்கிறது. இரவில் சப்பாத்தி, உப்புமா, தோசை சாப்பிடலாம். உப்புமாவுக்கு காய்கறி சேர்த்து கிச்சடி மாதிரி சாப்பிடலாம். வெஜ்டபிள் உப்புமா செய்யலாம். எந்த வகையில் நாம் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு குறைவாக இருக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் பக்கவாதத்தில் இருந்து சீக்கிரமாக வெளி வருவதற்கு எளிதாக இருக்கும். நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம்.

அசைவ பிரியர்கள் என்றால் பொறித்த, வறுத்த கோழி, மட்டன் உணவுகளை தவிருங்கள். ஆசைக்கு குழம்பில் போட்டு வேக வைத்ததை சாப்பிட்டுக் கொள்ளுங்கள். முட்டை என்றால் அதில் உள்ள வெள்ளை கரு மட்டும் சாப்பிடுங்கள். நாட்டுக்கோழி முட்டை என்றால் சிறப்பு. அது உங்களுக்கு அதிக புரதச்சத்துக்கு உதவும். தசைகள் வலுவடையும். பழங்கள் அதிகம் சாப்பிடலாம். ஜூஸ் போட்டு குடிப்பதை தவிர்த்து முழு பழமாக சாப்பிடுங்கள். பாட்டில் அல்லது பாக்கெட்டில் அடைத்து வைத்து விற்கப்படும் குளிர்பானங்களை குடிக்க வேண்டாம். தண்ணீர் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 லிட்டர் குடிக்கலாம். உணவு செரிமானத்தில் சிக்கல் இருப்பவர்கள் சீரக தண்ணீர் அருந்துங்கள்.

புகைப்பிடித்தல், மது அருந்தும் பழக்கத்தை நீங்கள் தவிர்த்தே ஆக வேண்டும். நான் சொன்ன உணவு முறைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள், பிசியோ தெரபிஸ்ட் பயிற்சிகள் இதன் மூலமாகவும் பக்கவாதம் என்ற கொடிய நோயில் இருந்து சீக்கிரம் வெளியே வந்து விடலாம்.

தொடர்புக்கு:

info@kghospital.com, 98422 66630

Tags:    

Similar News