சிறப்புக் கட்டுரைகள்

இந்திய ராணுவத்தின் முதல் பெண் மேஜர்

Published On 2023-09-09 11:01 GMT   |   Update On 2023-09-09 11:01 GMT
  • சட்டமோ, அரசோ, சீர்திருத்தவாதிகளோ சிந்திக்காத ஒன்றை அப்பெண் சிந்தித்தார்.
  • இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பெண்கள் இந்திய ஆயுதப் படையில் சேர்க்கப்படலாம்.

"ராணுவத்தில் சேருமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அவரவர்க்கு ஆர்வம் உள்ளிருந்து வர வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்தவும், இதயத்தில் எழும் ஆசையை பின்பற்றவும் ஒருவருக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால், ராணுவத்தில் சேருமாறு நான் பரிந்துரைக்கிறேன். பல சமயங்களில், பெண்கள் ராணுவத்தில் சேர விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய எதிர்ப்பைப் பற்றி பயப்படுகிறார்கள், எனவே இந்த எதிர்ப்புகளை பெண்கள் மன உறுதியுடன் எதிர்த்துப் போராடவும், அவர்கள் உண்மையில் விரும்புவதைச் செய்யவும் நான் அவர்களை ஊக்குவிக்கிறேன்."

- மேஜர் பிரியா ஜிங்கன்

இந்நாட்களில் இந்திய ராணுவத்தில் பெண்கள் சேருவதும், அங்கே தன் சாதனைகளை பதிப்பதும் மிக இயல்பாக, சாதாரணமாக உள்ளது. ஆனால் 1992 வரை பெண்கள் உள்ளே வர முடியாமல் இரும்புத் திரை போட்டு மூடி இருந்தது இந்திய ராணுவம். இன்றைக்கு பல பெண்கள் தன்னம்பிக்கையோடு படைப்பயிற்சிப் பெற்று வலம்வருவதற்கு முன்னோடியாய் இருப்பவர்தான் இந்தக்கட்டுரையின் நாயகி.

பெண்மையும், நளினமும், நாணமும், மென்மையும் கொண்டவர்கள் பெண்கள். அவர்களால் மிகக் கடுமையாகவும், வலிமையாகவும், கண்டிப்புடனும் பணியாற்ற வேண்டிய ராணுவத்தில் சேரவோ, பணியாற்றவோ முடியாது என்று இரும்புத் திரை போட்டு மூடியிருந்த கதவுகளை உடைக்க முடிவு செய்தார் ஒரு பெண். ஆம். சட்டமோ, அரசோ, சீர்திருத்தவாதிகளோ சிந்திக்காத ஒன்றை அப்பெண் சிந்தித்தார்.

தன் சிந்தனை செயல்வடிவம் பெற்றபிறகு, தன் கனவு நிறைவேறிய பிறகு பல்வேறு துறைகளில் சேவைகளும் சாதனைகளும் படைத்த பின்னர் அவரிடம்,

"உங்கள் கனவின் பின்னணி என்ன?" என்று ஒரு பத்திரிகையில் பேட்டி கண்டபோது அவர் மிகவும் உற்சாகமாக எப்படி பதிலளித்தார் தெரியுமா?

"நான் சொல்வது உங்களுக்கு ஒரு திரைப்படம் பார்ப்பது போலவோ, அல்லது வினோதமாகவோ தோன்றலாம். என் வாழ்வில் நான் என் நாட்டிற்காக ஆலிவ்பச்சை நிற சீருடையை அணிந்து நடக்கவேண்டும் என்று விரும்பினேன். சிறுவயது முதலே அது என் கனவாக இருந்தது. ஒருவேளை என் அப்பா போலீஸ் சர்வீசில் இருந்ததற்கும் நான் டாம்பாய் ஆனதற்கும் தொடர்பு இருந்திருக்கலாம்"

ஆம் நண்பர்களே! சிறுவயதில் நம் மனதில் எது அழுத்தமாகப் பதிந்து நம் லட்சியத்தை உருவாக்குகிறதோ, எது நம்முடைய சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் இயக்குகிறதோ அதுவாகவே மாறுவது என்பதை காலம் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

தன்னுடைய பள்ளி பருவத்திலேயே தான் கொண்டிருந்த ராணுவக் கனவுகளை நனவாக்கத் துடித்த ஒரு பெண்ணின் முயற்சிதான் பெண்களை ராணுவத்தில் சேர்க்கலாம் என்ற சிந்தனையைத் தூண்டி அதனை செயல்பாட்டிற்கும் கொண்டுவர வைத்தது.

வலிமையும், நெஞ்சுறுதியும், கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளும் திறனும், அர்ப்பணிப்பு உணர்வும் பெண்களுக்கும் உண்டென்பதை நிரூபித்து முதன்முதலில் இந்திய ராணுவத்திற்குள் காலடி வைத்ததோடு தான் விரும்பிய காலாட்படை பிரிவு கிடைக்கவில்லை என்றாலும் ராணுவத்தில் பச்சை நிற சீருடையோடு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததே என்று பத்தாண்டுகள் சிறப்பாக பணியாற்றி வெள்ளிப்பதக்கம் பெற்று ஓய்வுபெற்றார் அப்பெண். அவர் பெயர் பிரியா ஜிங்கன்.

இமாசலப் பிரதேசம் சிம்லாவில் ஒரு போலீஸ் அதிகாரியின் மகளாகப் பிறந்தவர் பிரியா ஜிங்கன். 9-ம் வகுப்பு படிக்கும்போதே ராணுவ வீரர்கள் அணிந்திருக்கும் ஆலிவ்பச்சை நிற சீரூடை மீது மிகுந்த ஆசை கொண்டார். ராணுவ சீருடை அணிந்து மிடுக்காக, தாய்நாட்டிற்காக பணியாற்ற வேண்டும் என்று அவருக்கு ஆர்வம் பிறந்தது. ஆனால் அது பெண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படாத காலம்.

பள்ளிப்படிப்பு முடிந்து பிரியா ஜிங்கன், சிம்லாவில் செயின்ட் பீட் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்க்கிறார். ராணுவத்தில் சேரவருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது அந்த விளம்பரம்.

பெண்கள் சேர முடியாதோ என்று கவலைப்பட்ட பிரியா, 1989-ல், "ராணுவத்தில் பணியாற்ற ஏன் ஆண்களை மட்டும் அழைக்கிறீர்கள்? என்னைப் போன்ற ஆர்வமுள்ள இளம் பெண்களையும் தேர்ந்தெடுப்பதற்கு வாசல் திறந்துவிடுங்கள். பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவார்கள். நான் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்று அப்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் சுனித் பிரான்சிஸ் ரோட்ரிகசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

பிரியா ஜிங்கனின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய ராணுவத் தளபதி, "ஒரு பெண்ணிடம் இத்தனை ஆர்வம் காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பெண்கள் இந்திய ஆயுதப் படையில் சேர்க்கப்படலாம்" என்று பதில் எழுதுகிறார்.

தன் கடிதத்திற்கு பதில் கிடைத்ததை எண்ணி ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் மகிழ்ந்த பிரியா, அக்கடிதத்தை தன் பொக்கிஷமாக இன்றுவரை பாதுகாத்து வருகிறார். தான் போலீசாக வேண்டும் என்று விரும்பிய தன் குடும்பத்தின் கனவுகளை தள்ளிவைத்துவிட்டு ராணுவத்தின் அழைப்புக்காக காத்திருக்க தொடங்குகிறார். அதே நேரத்தில் சட்டக் கல்வியும் படித்து முடிக்கிறார்.

பிரியா ஜிங்கன் எதிர்பார்த்தபடியே, 1992-ல், "பெண்களே! ராணுவம் உங்களை அழைக்கிறது" என்று பத்திரிகையில் விளம்பரம் வந்ததைப் பார்க்கிறார். அந்த விளம்பரத்தைப் பார்த்த அந்த நொடியே "என் பிரார்த்தனைகள் பலித்துவிட்டதாக எண்ணினேன்" என்று ஒரு பேட்டியிலும் கூறுகிறார் பிரியா.

ராணுவத்தில் ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் எனும் பதவிக்கு இரண்டு இடங்கள் காலியாக இருப்பதாகவும், மற்ற பணிகளுக்காகவும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. வந்த விளம்பரத்தைப் பார்த்து சட்டம் படித்த பிரியா ஜிங்கன் விண்ணப்பித்தார்.

காலாட்படை பட்டாலியனில் சேருவதற்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக சட்டப் பட்டதாரியான அவர் நீதிபதி அட்வகேட் ஜெனரல் கிளையில் சேர்க்கப்பட்டார்.

சேவைகள் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.பி.) மூலம் நடந்த நேர்காணலில் கலந்து கொண்டு ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு முதல் பெண்ணாக 001 கேடட் என அறிவிக்கப்பட்டு 1993 மார்ச் 6-ந்தேதி பணியமர்த்தப்பட்டார் பிரியா ஜிங்கன். இதன் மூலம் ராணுவத்தில் இணைந்த முதல் பெண்ணாக இந்திய வரலாற்றில் பதியப்படுகிறார் பிரியா ஜிங்கன். இவருடன் சேர்ந்து 24 பெண்கள் ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.

பணியில் சேருவதற்கு முன்பு பயிற்சிகள் பெறவேண்டும். அதற்காக சிம்லாவில் இருந்து சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி அகாடமிக்கு பிரியாவை தனியே அனுப்பும்போது அவரின் பெற்றோர் உள்ளுக்குள் மிகவும் பயந்துள்ளனர். அன்று இரவு முழுக்க அவர்கள் தூங்கவில்லை. ஆனாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் மகளின் கனவுகளுக்கு தடை சொல்லாமல் அனுப்பிவைத்ததை பின்னாட்களில் நன்றியுடன், "என் பெற்றோரின் ஒத்துழைப்பு இல்லையென்றால், என் கனவுகள் நிறைவேறி இருக்காது" என நினைவுகூர்கிறார் பிரியா ஜிங்கன். இவ்வார்த்தைகளை இன்றைய தலைமுறை மனதில் கொள்ளவேண்டும்.

சென்னையில் பயிற்சியில் இருக்கும்போது ஆண்கள் பெண்கள் என எந்தவித வேறுபாடும் இன்றி பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சியின்போது ஒருமுறை ராணுவப் பயிற்சி உடையோடு நீச்சல்குளத்தில் இறங்கவேண்டிய சூழ்நிலை வந்தது.

கூச்ச சுபாவமுள்ள பெண் கேடட்கள், ஆண் கேடட்களுடனே ஒரே நீச்சல் குளத்தில் இறங்க வேண்டும் அல்லது ஆண் அதிகாரிகளின் கண்காணிப்பில் பயிற்சி பெற வேண்டும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. பிரியா ஜிங்கன் உட்பட 25 பெண்களும் ஒரு டவலை தங்கள் உடையின் மீது சுற்றிக்கொண்டு அது கீழே விழாதவாறு இறுக்கமாக பற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த படைப்பிரிவு தளபதி கேப்டன் பி.எஸ்.பெஹ்ல் அவர்களை அட்டென்ஷனில் நிற்கும்படி கட்டளையிட்டார். உடையின் மீதிருந்த துண்டுகள் கீழே விழுந்தன. அந்தநொடியே புரிதலுடன் அவர்கள் முன்னேறிச் சென்றார்கள்.

"வழக்கமாக இருக்கும் ஸ்டீரியோடைப்களை உடைப்பது சவாலானதாக இருந்ததா?" என்றும், "உங்கள் குழுவில் உள்ள ஆண் கேடட்கள் பெண்கள் மீது என்ன எதிர்வினைகளை நிகழ்த்தினார்கள்?" என்றும் மேஜர் பிரியாவிடம் கேட்டபோது,

"உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் வழக்கத்தை, ஸ்டீரியோடைப்களை உடைக்கிறேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை; நான் மற்றவர்களைப் போல் திறமையானவள் என்று உணர்ந்தேன். என் கனவு நனவாகிவிட்டதால் நான் என் பணியின்பால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். எந்த பழைய தத்துவங்களைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை. ஆண் கேடட்கள் தங்களுடைய சொந்த பேட்ச்மேட்களை நடத்துவது போலத்தான் பெண்களாகி எங்களையும் நடத்தினார்கள். அதிகாரிகளும் தேவைக்கேற்ப கண்டித்தனர். பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டினர். அறிவுரைகள் தேவைப்படும்போது அவற்றையும் இருபாலாருக்கும் ஒன்றுபோலத்தான் வழங்கினர்.

"ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?" என்ற கேள்வி மேஜர் பிரியா ஜிங்கனிடம் வைக்கப்பட்டபோது அவர்,

"நான் கொடுக்கக்கூடிய ஒரே அறிவுரை என்னவென்றால், நீங்கள் இந்த உயரடுக்கு சக்தியின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் என்றால், அதைக் குறித்து மிகப் பெருமை கொள்ளாதீர்கள், மேலும் உங்கள் பெண்மையை உதவி கேட்கவோ அல்லது நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்வதைத் தவிர்க்கவோ பயன்படுத்த வேண்டாம். உங்கள் நியமனத்தின் கண்ணியத்தை நீங்கள் பராமரிக்க வேண்டும். நீங்கள் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், அதனால் வரும் சவால்களைச் சமாளிக்க, சுலபமான வழியையோ அல்லது அதைத் தவிர்க்க சாக்குப்போக்கையோ கண்டுபிடிக்க வேண்டாம்."

அறிவும் அனுபவமும் முதிர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே இப்படிப்பட்ட அறிவுரைகளை வழங்கமுடியும் அல்லவா!

ராணுவத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் நிறைந்த சேவைக்குப் பிறகு, மேஜர் ஜிங்கன் 2003-ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் ஆசிரியராகவும், பல்வேறு பயிற்சிவழங்குபவராகவும், தன்முன்னேற்ற பயிற்சியாளராகவும் மிகச் சிறந்த சேவைகளை வழங்கிவருகிறார்.

ராணுவத்தில் சேவையாற்றிய முதல் பெண் என்பதற்காக குடியரசுத்தலைவரிடம் பதக்கம் பெற்ற மேஜர் பிரியா ஜிங்கன். ராணுவத்தில் பெண்களுக்கு எதிராக வரும் புகார்களைப் பற்றியும் அவ்வப்போது அரசுக்கு எடுத்துரைத்து சமவாய்ப்பும், சமநீதியும் வழங்கவும் வலியுறுத்தி வருகிறார். வித்தியாசமாக சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு மேஜர் பிரியா ஜிங்கன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதானே!

Tags:    

Similar News