சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்: செய்யாத தப்புக்கு தண்டனை!

Published On 2023-09-11 11:09 GMT   |   Update On 2023-09-11 11:09 GMT
  • தெலுங்கிலும் புதுயுகம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
  • படிக்க வைப்பதா? நடிக்க விடுவதா? நடிக்கவிட்டால் எதிர்காலத்துக்கு கை கொடுக்குமா? என்ற பயங்கர குழப்பம்.

படிப்பா... நடிப்பா...

எந்த பாதையில் பயணிப்பது என்று எனக்கும் புரியவில்லை. அம்மா-அப்பாவுக்கும் எதுவும் புரியாமல் ஒருவிதமான தயக்கம்.

எட்டாம் வகுப்பில் பாதியிலேயே கதாநாயகியாக தெலுங்கு பட உலகில் கால் ஊன்றினேன். ராஜேந்திர பிரசாத்துக்கு ஜோடியாக நான் நடித்த நவயுகம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை.

அந்த நேரத்தில் தமிழிலும் 'ஒரு புதிய கதை' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கே.சுப்பையா டைரக்ஷன். அந்த படம்தான் தமிழில் நான் கதாநாயகியாக நடித்த முதல் படம். ஹீரோவும் பிரபுராஜ் என்ற அறிமுக நடிகர்.

நான் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவம் இருந்ததால் டைரக்டர் சொல்வதை கேட்டு அதற்கு ஏற்ப எங்கு நிற்க வேண்டும்? எப்படி திரும்பி நிற்க வேண்டும் என்பதை உடனே சரியாக செய்து விடுவேன்.

ஆனால் ஹீரோவுக்கு அதுதான் முதல் அனுபவம் என்பதால் சரியாக செய்யாமல் அடிக்கடி டைரக்டரிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பார். அதைப்பார்த்து எனக்கே கஷ்டமாக இருக்கும்.

அவர் என்னிடம் 'நீங்க நல்லா நடிக்கிறீங்க மேடம்' என்பார். கதாநாயகியாக எனக்கும் இதுதான் முதல்படம். உங்களுக்கும் நடிப்பு வந்துவிடும் என்று நான் அவருக்கு தைரியம் கொடுப்பேன்.

ஒரு புதிய கதை படப்பிடிப்பு முடிந்து படமும் 10.8.1990 அன்று வெளியானது. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

'ராசாவே என் ராசாவே', 'தெக்கத்தி காத்த டிச்சு உடம்பு ஒரு மாதிரி ஆயிடுச்சி' என்ற பாடல்கள் ரசிக்கும்படி இருந்தன. ஆனாலும் எனக்கு பெயர் வாங்கி தந்த படமாக அமையவில்லை.

தெலுங்கிலும் புதுயுகம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தமிழில் ஒரு புதிய கதையும் இப்படி ஆனதால் அம்மா, அப்பாவுக்கு மனதளவில் ஒரு விதமான பயம். நம் மகளை தொடர்ந்து நடிக்க வைக்கலாமா? சினிமா அவளது எதிர்காலத்துக்கு கைகொடுக்குமா? என்று ரொம்பவே யோசித்து கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் படத்தில் நடிப்பதற்காக என்னை தேடி வந்தார்கள். 'சீதா ராமையா காரிமனவரலுரு' அதாவது சீதாராமையாவின் பேத்தி என்ற அந்த படத்தில் நாகேஸ்வர ராவின் பேத்தி வேடத்தில் நடிக்க கேட்டார்கள். 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றார்கள்.

அதைக்கேட்டதும் அம்மா ரொம்பவே யோசித்தார். இதுவரை நடித்த படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. இந்த படத்தில் வேறு 35 நாட்கள் கால்ஷீட் கேட்கிறார்கள். இத்தனை நாட்கள் பள்ளிக்கூ டத்துக்கு போகாவிட்டால் படிப்பும் கெட்டுப் போகும். படிக்க வைப்பதா? நடிக்க விடுவதா? நடிக்கவிட்டால் எதிர்காலத்துக்கு கை கொடுக்குமா? என்ற பயங்கர குழப்பம்.

கடைசியில் நடிக்க வைக்க வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள். கால்ஷீட் கேட்டு வந்தவர்களிடம் நடிக்க வைக்க விரும்பவில்லை. அவள் படிக்கட்டும் என்று அம்மா உறுதியாக கூறினார்.

ஆனால் படக்குழுவினரோ 'இது நல்ல கதை' நாகேஸ்வர ராவின் பேத்தி பாத்திரமும் வலுவாக உள்ளது. இந்த பாத்திரத்தில் மீனா நடித்தால் நிச்சயம் பெயர் வாங்கி கொடுக்கும் என்றார்கள்.

ஆனால் அம்மா-அப்பாவுக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை. 'யோசிக்கி றேன்' என்றார்கள்.

ஆனால் படக்குழுவினர் 'இந்த ஒரு முறை... 35 நாட்கள் மட்டும் அனுமதியுங்கள்... பெயர் கிடைக்காவிட்டால் அப்புறம் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு படிக்க வையுங்கள்' என்று வற்புறுத்தினார்கள்.

அவர்களின் வற்புறுத்தலை தட்ட முடியாமல் அம்மாவும் சம்மதித்தார். அதைக்கேட்டதும் படக்குழுவினருக்கு மிகுந்த சந்தோசம்.

சம்பளம் உள்ளிட்ட எல்லா விசயங்களையும் பேசி முடித்துவிட்டு ஷூட்டிங் தேதியை சொல்லி அனுப்புகிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

சீதா ராமையாவின் பேத்தி கதாபாத்திரத்தில் நடிகர் நாகேஸ்வரராவ் பேத்தியாக நடித்தேன்.

தெலுங்கில் புகழ்பெற்ற நடிகர் நாகேஸ்வரராவ். அவரது பேத்தியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். படம் எப்படியாவது வெற்றிப்படமாக அமைய வேண்டுமே என்ற எண்ணத்தோடு முழு ஈடுபாட்டோடு நடிக்க தொடங்கினேன்.

டைரக்டர் கிராந்திகுமார். ரொம்ப கோபக்காரர். அதே நேரம் மனதுக்குள் பாசம் உண்டு. அந்த பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவர் என்பது தான் உண்மை.

டைரக்டரிடம் திட்டு வாங்கிவிட கூடாது என்பதற்காகவே வசனங்களை அடிக்கடி மனப்பாடம் செய்து கொள்வேன். தெலுங்கு நன்றாக பேச தெரிந்து இருந்தாலும் சில நேரங்களில் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் வைத்து திடீரென்று வசனங்களை மாற்றி தருவார்கள். அந்த நேரங்களில் தான் மனம் கொஞ்சம் திக்... திக்.. என்று இருக்கும்.

என்னதான் இருந்தாலும் தெலுங்கு தாய்மொழி இல்லையல்லவா? எனவே திடீரென்று புதிதாக நிறைய வசனங்கள் தந்தால் பேச பயமாக இருக்கும்.

பாடல் காட்சிகளில் சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக பாடல்களை போட்டு கேட்டுவிட்டுத்தான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

ஒரு காட்சியில் நிறைய மந்திரங்கள் சொல்லி நடிக்க வேண்டும். அந்த மந்திரங்களை மனப்பாடம் செய்து அப்படியே சொல்லி 'சபாஷ்' வாங்கினேன். அது மனதுக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது.

நமது பாத்திரம் மூலம் டைரக்டர் படத்தில் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு பேசினால் முகபாவனையும் நன்றாக வந்துவிடும் என்று அட்வைஸ் செய்வார்கள். அப்படித்தான் மெல்ல மெல்ல பழகி கொண்டேன்.

ஒரு நாள் ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் படப்பிடிப்பு. நான் பாவடை-சட்டையில் போய் நின்றதை பார்த்ததும் டைரக்டர் இந்த காஸ்ட்டியூம் யார் சொன்னது? பாவாடை தாவணி தான் அணிய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

உடனே புதிய காஸ்ட்டியூமை தயார் செய்வ தற்காக ஓடினார்கள். புதிய காஸ்ட்டியூமை உடனே தைத்து ரெடி பண்ணி கொண்டு வருவதும் சிரமம் தான். ஆனால் டைரக்டர் அதை யெல்லாம் யோசிக்கமாட்டார். என்ன செய்தாலும் சரி. அவர் எதிர் பார்க்கும் காஸ்ட்டியூமை உடனே தயார் செய்தே ஆக வேண்டும்.

துணி எடுக்க சென்றவர் மதியம் வரை வரவில்லை. அவருக்காக நான் காத்திருந்தேன். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. காலதாமதம் ஆனதால் டைரக்டர் சூடாகி இருக்கிறார். அது எனக்கு தெரியாது.

துணி வந்ததும் அவசர அவசரமாக பாவாடை, தாவணி காஸ்ட்டியூமில் ரெடியாகி படப்பிடிப்புக்கு ஓடினேன்.

என்னை பார்த்ததும் டைரக்டருக்கு கடும் கோபம். இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறேன் என்று நினைத்து இருக்கிறார். ஆனால் அது என் தப்பில்லை. துணி கிடைப்பதற்கு தாமத மாகி விட்டது. அதற்கு நான் என்ன செய்வது?

ஆனால் டைரக்டருக்கு அந்த பிரச்சினை எதுவும் தெரியவில்லை. டிரெஸ் மாற்றிவிட்டு வருவதற்கு இவ்வளவு நேரமா? என்று கன்னா பின்னாவென திட்டினார். ஒரே படத்தில் இவ்வளவு திமிரா உனக்கு? என்று கடுமையாக திட்டினார்.

எதற்காக திட்டுகிறார்? நாம் எந்த தப்பும் செய்யவில்லையே? செய்யாத தப்புக்கு ஏன் இப்படியெல்லாம் திட்டுகிறார்? என்று தவித்து போனேன். முகம் சுருங்கி கண்கள் கலங்கிவிட்டன.

என்னை பார்த்து பரிதாபப்பட்ட தாராமாஸ்டர் தான் எனக்கு ஆறுதல் கூறினார். 'அவர் அப்படித்தான்' நீ எதையும் கண்டுக்காதே, என்று என்னை தேற்றினார்.

அவர் எப்போது திட்டினாலும் கொஞ்சம் நேரத்தில் மறந்து விடுவார். நீ நடிப்பதில் கவனமாக இரு. நீ எந்த தப்பும் செய்யவில்லை. எனக்கு புரிகிறது. நிச்சயம் அவரும் புரிந்து கொள்வார் என்று என்னை ஆசு வாசப்படுத்தி நடிக்க வைத்தார்.

கண்களை துடைத்துக்கொண்டு காட்சி யில் நடிக்க சென்றேன். இப்படித்தான் அந்த படத்தில் பரபரப்பு, பதட்டம், பயம் என்று எல்லாவற்றையும் சந்தித்து தான் ஒவ்வொரு காட்சி யையும் நடித்து முடித்தேன்.

35 நாட்களில் திட்ட மிட்டபடி படப்பிடிப்பு முடிந்தது. அப்புறம் அங்கு என்ன வேலை? சென்னைக்கு திரும்பிவிட்டேன்.

பட வேலைகள் முடிந்து குறிப்பிட்ட நாளில் படமும் திரைக்கு வந்தது!

'ரிசல்ட்' எப்படி? இந்த படமாவது கை கொடுத்ததா? கை விட்டதா? அடுத்த வாரம் சொல்கிறேன்...

(தொடரும்)

Tags:    

Similar News