சிறப்புக் கட்டுரைகள்

திருச்சி அருகே 'மத்திய திருப்பதி': மனநலம் காக்கும் குணசீலன்

Published On 2023-09-21 11:06 GMT   |   Update On 2023-09-21 11:06 GMT
  • உற்சவர் ‘ஸ்ரீதேவி பூமிதேவியுடன் ஸ்ரீனிவாசப் பெருமாளாக’ திருவருள் புரிகிறார்.
  • திருமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் காட்சி கொடுத்த தலமாதலால் புரட்டாசி மாதம் முழுவதும் குறிப்பாக சனிக்கிழமைகள் அதிக மக்கள் வருகை இருக்கும்.

மாறுபட்ட நிலையில் இருக்கும் பக்தர்களுக்காக திருமால் கீழிறங்கி வந்து சீலம் எனப்படும் ஒழுங்குபடுத்துவது அல்லது குணப்படுத்துமிடம் குணசீலம் ஆகும். புகழ்பெற்ற குணசீலம் திருச்சியில் இருந்து முசிறி செல்லும் வழியில், சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருப்பைஞ்ஞீலி வனத்தில் எழுந்தருளி தவம் செய்து கொண்டிருந்த தால்பிய மகரிஷிக்கு குணசீல மகரிஷி சீடரானார். இவர்கள் இமயம் உள்ளிட்ட வடதேசங்களுக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்து திருப்பைஞ்ஞீலி திரும்பும் வழியில் திருமலையில் திருவேங்கடமுடையானையும் தரிசித்தனர். திருவேங்கடமுடையானின் திவ்ய தரிசனத்தில் மனதைப் பறிகொடுத்த குணசீலர் அங்கிருந்து அகல மனமின்றி குருவோடு திருப்பைஞ்ஞீலி திரும்பினார். ஊர் திரும்பியும் வேங்கடவனை மறக்காத குணசீலர் காவிரி நீராடி, எந்நேரமும் வேங்கடவனை நினைத்துக் கடும்தவத்தில் ஈடுபட்டார்.

காலச்சக்கரச் சுழற்சியில், கடும் மழையிலும் இடியிலும் தவம் தொடர்ந்தது. குணசீலரின் இடைவிடாத தவத்துக்கு மகிழ்ந்த பெருமாள் காவிரிக் கரையில் இருந்த குணசீல மகரிஷியின் ஆசிரமத்திற்கு உபய நாச்சியார்களுடன் ஒளி வண்ணத்தில் கருடன் மீதமர்ந்து எழுந்தருளிய வேங்கடேசனின் அருட்காட்சி கண்டு தொழுதார் குணசீலா்.

குணசீல மகரிஷி பெருமாளிடம் பக்தர்கள் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை வழங்கவும் மனித மனங்கள் சீலம் பெறவும் 'மத்திய திருப்பதி' எனும் பெயரால் எப்போதும் இக்காவிரிக்கரையில், பிரசன்ன வேங்கடேசனாக எழுந்தருளி குறைகளை நீக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.

வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் வேங்கடவன் அவரின் வேண்டு தலை ஏற்று, கலியுக வரதனாக ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் என்ற பெயரோடு விக்ரக வடிவில் சங்கு, சக்கரம், வரதம், கடிக ஹஸ்தம் கொண்டவராக எழுந்தருளினார். எல்லாவற்றுக்கும் மேலாக கையிலே செங்கோல் தாங்கி "ராஜா வேங்கடநாதன்"என்ற வடிவில் இங்கு காட்சி கொடுத்தார். அப்போதும் திருமார்பில் திருமகளோடு, அா்ச்சாவதாரத் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிர அருள்பாலித்தார்.

ஊரும் பேரும்: குணசீல மகரிஷிக்கு காட்சி தந்து பெருமாள் எழுந்தருளிய தலமாதலால் குணசீலம்' என அழைக்கப்பட்டது.. மூலவா் 'ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி' என்ற திருநாமத்துடன் அருளுகிறார். உற்சவர் 'ஸ்ரீதேவி பூமிதேவியுடன் ஸ்ரீனிவாசப் பெருமாளாக' திருவருள் புரிகிறார்.

குணசீலரின் குரு தால்பியர், தவம் புரிந்து கொண்டிருந்த தன்னுடன் வந்து தங்கி இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்றார். அப்போது குணசீலம் காடாக இருந்தது. வன விலங்குகள் சீடன் இருக்குமிடம் வந்து தொந்தரவு அளித்தன. பயந்துபோன சீடன் எவரிடமும் எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து ஓடி விட்டான். காலப்போக்கில் பெருமாளை புற்று மூடியது.. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனையில் இருந்த பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன.

தொடர்ச்சியாக மேய்ச்சலுக்குப் போன பசுக்களின் மடியில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் காரணத்தையும் இந்த அதிசயத்தையும் அறிய வந்தான். அப்போது ஒலித்த அசரீரியால், புற்றுக்குள் பெருமாள் இருப்பதை அறிந்து பசுக்கள் அதன் மீது பால் சொறிவதைக் கண்டான். மன்னன் சிலையை கண்டெடுத்து கோவில் எழுப்பினான். புற்றிலிருந்து தோன்றியதால் "பிரசன்ன வெங்கடாஜலபதி" எனப் பெயரிட்டு வணங்கத் தொடங்கினார்கள். அது முதல் மக்கள் வழிபட்டு வரும் இக்கோவிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு வரும் போது பக்தர்கள் வழிபாடும் பூஜையும் தடைபடுவதால் சிறிது காலம் முன்பு சன்னதி வெள்ளத்தால் பாதிக்காத அளவு உயர்த்தியும் சுற்றிலும் பக்தர்கள் வசதியை முன்னிட்டு பிரகார மண்டபமும் அமைக்கப்பட்டது.

ராஜ கோபுரம் கடந்து செல்லும் போது இடது புறம் விகனச குருவின் சன்னதியும் பிரகாரச்சுற்றும் அமைந்துள்ளன. சன்னதி முன்புறம் கொடிமரம் பலிபீடம் தாண்டி மகாமண்டபமும் அர்த்த மண்டபமும் அடுத்து கருவறையும் அமைந்துள்ளன.

குலம் காக்கும் குணசீலன்: கருவறையில் பலருக்கு குல தெய்வமாகவும் கண்கண்ட தெய்வமாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவதை அருளும் வரப்பிரசாதியாக பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் சங்கு, சக்கரம், வரதம், கடிக ஹஸ்தம் கையிலே பில்லி சூனியம் ஆகியவற்றை அதட்டி ஓட்டும் தண்டமும் ராஜ்யத்தை நிர்வகிக்கும் தங்க செங்கோலும் கொண்டு திரிநேத்ர விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் அருளுகிறார். உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளக்கிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் இருந்து அனுக்கிரகிக்கிறார். தாயார் பெருமாளுடன் சேர்ந்தே திருமார்பிலேயே இருந்து அருளுவதால் தனி சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை.

மலர் சார்த்தி மகிழும் பக்தர்கள்: தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது, பெருமாளுக்கு சார்த்துவதற்கான சுத்தமான வாசம்மிக்க மலர்கள் விளைவிக்க திருநந்தவனம் அமைக்கப்பட்டு அதில் இருந்து வரும் மலர்களைக் கொண்டு தொடுத்து பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. நந்தவன பராமரிப்பில் பக்தர்களும் பங்கேற்கிறார்கள்.

நாளும் வழிபாடும்: தினமும் காலை 6.30 முதல் மதியம் 12.30 மணிவரையும், மாலை 4 இரவு 8.30 மணி வரையும் தரிசன நேரமாக உள்ளது, தினமும் விஸ்வரூபம், காலசந்தி,உச்சிகாலம், சாயுங்காலம்,அர்த்தஜாம் என 5 காலபூஜைகள் நடக்கின்றன; பிரார்த்தனைத் தலமாதலால் வாரத்தில் அனைத்து நாட்களும் முக்கிய நாட்களாகும். சனி ஞாயிறு அதிகளவில் மக்கள் வருகை தருகின்றனர். மாதப்பிறப்பு அமாவாசை, பவுர்ணமி திருவோணம் முக்கிய நாட்களாக இருந்தாலும், சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, புரட்டாசியில் நடைபெறும் 11 நாட்கள் பிரம்மோற்சவம் மக்களின் உளம் கவர்ந்தவையாகும் . திருமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் காட்சி கொடுத்த தலமாதலால் புரட்டாசி மாதம் முழுவதும் குறிப்பாக சனிக்கிழமைகள் அதிக மக்கள் வருகை இருக்கும்.

பன்னிரு கருட சேவை: கோவில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடனில் எழுந்தருளி சேவை சாதிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு.

பிரார்த்தனைத் தலம்: அபிமான மற்றும் பிரார்த்தனைத் தலமாகவும் இருப்பதால் அங்கப் பிரதட்சணம், அடி பிரதட்சணம், முடி காணிக்கை, செலுத்துதல், சந்தனக்காப்பு, புஷ்பாங்கி சேவை, கருடசேவை, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செய்தல் ஆகியவை நடக்கின்றன. இதனை "மத்திய திருப்பதி" என அழைத்து வணங்குவதால் திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை இங்கு செலுத்துகிறார்கள்.

நோய் நீக்கும் நிமலன்: இப்போது மட்டுமில்லாமல் தொன்மைக் காலத்திலேயே கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி குறை நீங்கி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாடலும் இயற்றிப் பாடியுள்ளான். இன்று பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் மன நிம்மதிக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.

மன நோய் நீக்கும் மருத்துவர்: 60 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கோவிலின் கல் தூணில் பிணைத்து வைத்திருப்பார்கள். திருக்கோவில் பணியாளர்கள் காலை 5 மணிக்கு அவர்களை வரிசையாக அழைத்துச் சென்று காவிரியில் குளிக்க வைத்து சன்னதியின் முன்புறம் நிறுத்திவைத்து விஸ்வரூபம் தரிசனம் செய்வார்கள். மதியம் உச்சி காலத்தில் அவர்களுக்கு பெருமாளின் திருமஞ்சன தீர்த்தம் அடிக்கப்படும். உணவும் பராமரிப்பும் திருக்கோவிலே செய்து வந்தது. பில்லி சூனியம் மனபிரமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம் தங்கி மனபிரமை நீங்கி சித்தம் தெளிந்து பூரண குணம் பெற்று வீடு திரும்பிய நிலையை என் இளமைக் காலத்தில் கண்டுள்ளேன். இந்தக் கோவிலின் இந்த இடத்தின் சிறப்புகளில் அதுவும் ஒன்றாகும்.

மனநல மறுவாழ்வு இல்லம்: தற்போது அரசு அனுமதிப்படி மனநல சுகாதார மறுவாழ்வு இல்லம் அமைந்துள்ளது. இம்மையத்தில் தனிப்பட்ட அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளது. வாரம் ஒன்று அல்லது இருமுறை அரசின் மனநல மருத்துவர் மையத்திற்கு வந்து பார்வையிட்டு தேக மன ஆரோக்கியத்தை பரிசீலித்துச் செல்லுகிறார். தினசரி மனநிலை பாதிப்படைந்த மக்களை கவனித்துக்கொள்ளும் பணியாளர்கள் உள்ளனர். 48 நாட்களுக்கு உச்சிகாலம் (நண்பகல்) மற்றும் அர்த்தசாமத்தின் (இரவு) போது ஒவ்வொரு நாளும் மன பாதிப்படைந்த மக்களை பூஜையின்போது குணசீலப்பெருமாள் முன்பு அமரச்செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளித்து பிரசாதம் வழங்கப்படுகிறது. இறையருளால் அவர்கள் பூரண குணம் பெற்று ஊருக்குத் திரும்புகிறார்கள்.

குணசீலத்து வேங்கடவன் துணையிருக்க குறையேதுமில்லை! வினையேதுமில்லை! பயமேதுமில்லை! 

Tags:    

Similar News