சிறப்புக் கட்டுரைகள்

முதுமையில் ஏற்படும் மூட்டுவலியும் தீர்வுகளும்

Published On 2023-09-27 11:14 GMT   |   Update On 2023-09-27 11:14 GMT
  • 60 வயதினைக் கடந்த 50 சதவீதம் பேருக்கு ஆர்த்ரைடிஸ் பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • மஞ்சளும், இஞ்சியும் நம் மூட்டுக்களை பாதுகாக்கும் எளிய பாரம்பரிய மூலிகைகள்.

முதுமையில் உண்டாகும் பல்வேறு நோய்நிலைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது மூட்டுவலி தான். மூட்டுவலிக்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், மூட்டுக்கள் தேய்மானத்தால் ஏற்படும் 'மூட்டுவாதம்' (ஆர்த்ரைடிஸ்) முதுமையில் அதிகம் பேருக்கு காணப்படும்.

பொதுவாக மூட்டுவாதம் (ஆஸ்டியோ-ஆர்த்ரைட்டிஸ்) ஆண்களுக்கு இடுப்பு மூட்டுக்களையும், பெண்களுக்கு முழங்கால் மூட்டுக்களையும் அதிகம் பாதிக்கின்றது. 60 வயதினைக் கடந்த 50 சதவீதம் பேருக்கு ஆர்த்ரைடிஸ் பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க ருமட்டாய்டு எனும் முடக்கு வாதமும், 'கவுட்' எனும் யூரிக் அமிலம் அதிகரிப்பால் உண்டாகும் மூட்டு வீக்கமும் கூட ஏற்படக்கூடும். இதில் முடக்கு வாதம்(RA) பெண்களுக்கு அதிகம் காணப்படுவதாகவும், 'கவுட் நோய்'(gout) ஆண்களுக்கு அதிகம் ஏற்படுவதாகவும் உள்ளது. சோரியாசிஸ் எனும் தோல்நோயின் நாட்பட்ட நிலையிலும் சிலருக்கு உண்டாகக்கூடும்.

முதுமையில் தாங்கிப் பிடிக்கக்கூட துணையின்றி தனிமையில் வாடும் தருணத்தில், இந்த மூட்டுகள் ஏற்படுத்தும் தொந்தரவுகளுக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் நவீன வாழ்வியலுக்கு மாறிப்போன வீடுகளும், அதில் பதியப்படும் டைல்ஸ் எனும் தரை ஓடுகளும், முதுமையில் மூட்டுக்களுக்கு கூடுதல் சவால்கள்.

வழவழவென்று தரை ஓடுகளைப் பதிப்பதால் முதுமைக்கு உண்டாகும் அவலங்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு புரிவதில்லை என்பது வருத்தம் தான். இதனால் முதுமையில் பலர் தரையில் கால் வைக்க கூட பயந்து வாழ்வது கூடுதல் மன வருத்தம்.

காலையில் மூட்டுக்களில் தோன்றும் விறைப்புநிலையே எந்த வகையான மூட்டுவியாதி என்பதை உறுதி செய்ய உதவும். வயது மூப்பினால் உண்டாகும் மூட்டுவலியில் காலை விறைப்பு நிலை ஒரு மணி நேரத்திற்குள் குறைந்து விடும். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் நிலை முடக்கு வாதத்தில் மட்டுமே காணப்படும். மேலும் மூட்டு சார்ந்த வியாதிகளால் மூட்டுவலி என்பது ஒருபுறமிருக்க, முதுமையில் ஏற்படும் மன அழுத்தத்தாலும் மூட்டுவலி உண்டாவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

மேற்கூறிய மூட்டு வலிகளுக்கு இயற்கை நிவாரணம் தேடுவது நலம். ஏனெனில் வலி நிவாரணி மாத்திரைகள் வயிறு சார்ந்த உபாதைகளையும், சிறுநீரக நச்சுத் தன்மையையும், ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுத்தரவுகள் எச்சரிக்கை விடுப்பதால் அவற்றை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. எனவே இயற்கை தந்த இம்மருந்துகளை நாடுவது முதுமையில் மூட்டுவலிக்கு அதிக பக்க விளைவுகள் இன்றி நிவாரணம் தரும்.

சித்த மருத்துவக் கூற்றின்படி, நோய்களுக்கு காரணமாகும் வாதம், பித்தம், கபம் ஆகிய இவற்றுள் 'கபவாதம்' கூட்டணியால் மூட்டுக்கள் தேய்மானம் அடைந்து நோய்நிலையை உண்டாக்குகிறது. இதனால் மூட்டுக்களில் வலி, வேதனை, வீக்கம், நடக்க முடியாத சிரமம், முக்கியமாக உட்கார்ந்து எழும்போது அதிக சிரமம் ஆகிய குறிகுணங்களை உண்டாக்கி முதுமையை இன்னும் சிரமம் உள்ளதாக மாற்றும்.

முதுமையில் இத்தகைய மூட்டு சார்ந்த வியாதிகள் வரவிடாமல் தடுக்க எளிமையான மருத்துவ முறையாக, காலையில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் இவற்றை எடுத்துக்கொள்ள கோலை ஊன்றி நடக்கும் கிழவனும், குமரனைப் போல் நடப்பான் என்கிறது சித்த மருத்துவப் பாடல் வரிகள். ஆக, கற்ப மருந்தாக இஞ்சி, சுக்கு, கடுக்காய் இவற்றை நாடுவது முதுமையில் மூட்டு வியாதிகளை தடுப்பதோடு, குணப்படுத்தவும் உதவும்.

காலையில் இஞ்சியை எடுத்துக்கொள்ள பித்தம் சமநிலை அடையும். காய்ந்த இஞ்சியான சுக்கினை பகல் நேரங்களில் எடுத்துக்கொள்ள வாதம் தன்னிலை அடையும். மாலையில் கடுக்காய் பொடியினை இரவு உணவுக்குப் பின் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ள கபம் தன்னிலைப்படும். இவ்வாறு வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் சமநிலை அடைந்து மூட்டுநோய்களை மட்டுமல்லாது, இன்னும் பிற நோய்களையும் விரட்டும்.

மூட்டு வலிக்கு எளிய சித்த மருந்துகளாகிய சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு சூரணமும், அமுக்கரங்கிழங்கு சூரணமும் நல்ல பலன் தரும். திரிகடுகு சூரணத்தை தினசரி தேனில் கலந்து எடுத்துக்கொள்ள மூட்டுவலிக்கு நல்ல பலன் தரும். மூட்டுக்களின் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை இதற்குண்டு.

அதே போல் அமுக்கராகிழங்கில் உள்ள தாவர வேதிப்பொருட்கள் மூட்டுக்களில் சேதமடைந்த குருத்தெலும்புகளை சீர் செய்வதுடன் மேலும் சேதமடையாமல் பாதுகாக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் அமுக்கரா சூரணம் பல்வேறு நோய்நிலைகளில் பலப்பல நன்மைகளை தருவதாக உள்ளது. இதனை 'மூலிகை சர்வ ரோக நிவாரணி' என்றே சொல்லலாம். முதுமையில் அமுக்கராவை எடுத்துக்கொள்ள ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும். கபவாதத்தை நீக்கும் எளிய மற்றுமொரு மூலிகை நொச்சி இலை. நொச்சி இலையில் உள்ள லிக்னேன் வகை தாவர வேதிப்பொருட்கள் மூட்டுக்களில் வீக்கத்தை உண்டாக்கும் காக்ஸ் நொதிகளை தடுத்து மூட்டு வியாதியில் நீடித்த நிவாரணம் தரக்கூடியது. நொச்சி இலையுடன் மிளகும், பூண்டும் சேர்த்து கசாயமாக்கி காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள மூட்டு வலிக்கு நல்ல பலன் தரும்.

முதுமையில் மூட்டு வியாதியில் முருங்கைக்கீரையும் நற்பலன் தரக்கூடியது. மூட்டுக்களுக்கு தேவையான கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட முருங்கைக்கீரையில் 17 மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வுத்தரவுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு. முதுமையில் பாலுக்கு மாற்றாக முருங்கைக்கீரையை நாடுவது மூட்டுக்களுக்கு நலம் பயக்கும். முதுமையில் ஊன்றுகோல் தேவை இருக்காது. 'முருங்கையை நட்டவன் வெறும் கையோடு நடப்பான்' என்ற பழமொழியின் பொருள் மூலம் அறியக்கிடக்கின்றது.

முடக்கினை நீக்கும் முடக்கறுத்தான் கீரை முதுமைக்கு தவமின்றி கிடைத்த வரம். முடக்கறுத்தான் கீரையுடன் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், பெருங்காயம், உப்பு போன்ற வாதத்தை நீக்கும் பிற மூலிகை கடைசரக்குகளை சேர்த்து சூப் செய்து வாரம் இருமுறை எடுத்து வர மூட்டுவாத நோய்நிலையில் நற்பலன் தரும். முடக்கறுத்தானில் உள்ள இயற்கை வேதிப்பொருட்கள் மூட்டுக்களின் வீக்கத்தைக் குறைப்பதோடு மூட்டுக்களை வன்மைப்படுத்துவதாகவும் உள்ளன.

அதே போல் மூட்டுக்களை வன்மைப்படுத்த பிரண்டைத் துவையல், கேழ்வரகு உருண்டை அல்லது களி, தினை மா உருண்டை, எள்ளு உருண்டை ஆகிய எளிய பாரம்பரிய உணவுகளை நாடுவது நல்லது.

முதுமையில் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது மூட்டு வியாதிகளுக்கு நல்லது. எனவே 'திரிபலை சூரணம்' எனும் சித்த மருந்தை இரவு நேரங்களில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது உடல் எடை கூடாமல் தடுக்கும். அத்துடன் மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுடையது. மலச்சிக்கல் இருப்பினும் உடலில் வாதம் அதிகரித்து மூட்டுவலியை அதிகரிக்கும். எனவே மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

மஞ்சளும், இஞ்சியும் நம் மூட்டுக்களை பாதுகாக்கும் எளிய பாரம்பரிய மூலிகைகள். மஞ்சளில் உள்ள 'குர்குமின்' எனும் இயற்கைநிறமி மூட்டுக்களின் வீக்கத்தைக் குறைப்பதாக உள்ளது.

இது வலி நிவாரணி மருந்துகளை விட மூட்டுவலிக்கு நல்ல நிவாரணம் தருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது மூட்டு வலிக்கான தங்க மூலிகை. மூட்டுக்களில் வீக்கத்தை உண்டாக்கும் பல்வேறு நொதிகளை தடுத்து ஆர்த்ரைடிஸ் நிலையில் பலன் தரக்கூடியது. எனவே முதுமையில் மூட்டுவலி நீங்க பாலில் மஞ்சள் பொடி சேர்த்து எடுத்துக்கொள்வதும் சிறந்த பலனைத் தரும்.

சுக்கு வாதத்தை உடைத்து எறியும் தன்மை உடையது. 'சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை' எனும் பழமொழி இதனை உணர்த்தும். சுக்கில் உள்ள 'ஜின்ஜிபெரின்' எனும் வேதிப்பொருள் மூட்டு வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டுக்களின் விறைப்புத் தன்மையைக் குறைக்கவும் உதவும். பாலில் இஞ்சி அல்லது சுக்கு சேர்த்து எடுத்துக்கொள்வதும் மூட்டு வியாதிகளுக்கு நல்லது. ஆக, பாலில் சுக்கும், மஞ்சளும் சேர்த்து குடிப்பது மூட்டு வியாதிகளுக்கு நல்லது என்பதை முதியோர்கள் புரிந்துகொண்டு நம்பிக்கையோடு பயன்படுத்த நலிந்த மூட்டுக்களை வலிமையாக்கும்.

மூலிகைகள் மட்டுமின்றி கால்சியம் பற்றாக்குறையை நீக்கி மூட்டுக்களை வன்மைப்படுத்த சங்கு பற்பம், பவள பற்பம், குங்கிலிய பற்பம், சிலாசத்து பற்பம் போன்ற எண்ணற்ற மருந்துகள் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நாட்பட்ட மூட்டு வலி சார்ந்த நோய்நிலையில் செந்தூர மருந்துகளும், மெழுகு மருந்துகளும் சிறப்பான பயன் தருவதாக உள்ளன.

அத்துடன் வெளி பிரயோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பிண்ட தைலம், வாதகேசரி தைலம், சிற்றாமுட்டி தைலம், நொச்சி தைலம், சுக்கு தைலம், வாதமடக்கி தைலம் ஆகியவைகளும் நற்பலனைத் தரும். எளிமையாக வீட்டில் நல்லெண்ணையுடன் பூங்கற்பூரம், ஓமம் சேர்த்து காய்ச்சி மூட்டுக்களில் தடவி வருவதாலும் வலி குறைந்து வேதனை தணியும். ஓமம் வாதத்தைக் குறைத்து வலியைப் போக்கும். வெந்நீரில் நொச்சி இலை, தழுதாழை இலை, வாத நாராயணன் இலை இவற்றில் ஒன்றை சேர்த்து கொதிக்க வைத்து ஒற்றடமிடவும் வீக்கம் குறைந்து வலி குறையும்.

இன்றைய சூழலில் முதுமையில் மூட்டு வலி என்பது தவிர்க்க முடியாத நோய்நிலையாக உள்ளது. இது. வயது மூப்பின் அடையாளக் குறிகுணம். இருப்பினும் இந்நோய்நிலையானது வாழ்க்கைத் தரத்தை பாதிக்காமல் இருக்கவும், தொடர்ந்து ஆரோக்கிய நடை போடுவதற்கும் சித்த மருத்துவ மூலிகைகளையும், சித்த மருந்துகளையும் நாடுவது நற்பலன் தரும்.

தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News