சிறப்புக் கட்டுரைகள்

சித்த மருத்துவத்தில் புற சிகிச்சை முறைகள்

Published On 2023-10-01 04:08 GMT   |   Update On 2023-10-01 04:08 GMT
  • நோய்களுக்கு ஏற்ப உள்மருத்துவம் மற்றும் புறமருந்துகள் தேர்வு செய்து சிகிச்சையளிக்கும்போது பிணியாளன் விரைவில் குணமடைகிறான்.
  • கோதுமை தவிடை வறுத்து துணியில் முடிந்து மார்பு மற்றும் முதுகு பகுதியில் ஒற்றடமிட்டு வர மார்பு சளி கரையும்.

தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவம் மனித இனம் தோன்றிய காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும். நாய்க்கு தன் உடல் கோளாறுகளுக்கு அருகம்புல்லைத் தின்னவும், பூனைக்கு குப்பைமேனியை வணங்கவும், கீரிக்கு விடம் பாதிக்காமல் இருப்பதற்கு கீரிப்பூண்டில் உருளவும் சொல்லிக் கொடுத்த இறைவனாகிய சிவபெருமானே மனிதருக்கு மருத்துவத்தை சொல்லிக்கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

"மறுப்பது உடல் நோய் மருந்தெனலாகும்

மறுப்பது உளநோய் மருந்தென சாலும்

மறுப்பது இனிநோய் வாராதிருக்க

மறுப்பது சாவை மருந்தெனலாமே"

என்ற திருமூலரின் வாக்கிற்கு இணங்க, சித்த மருத்துவம் காப்பு, நீக்கம், நிறைப்பு என்ற மூன்று தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. நோய் வருவதற்கு முன்பே சுகநிலையில் நோய் ஏற்படாதிருக்க மருந்து உண்டால் அம்மருந்துகள் 'காப்பு' என்றும், நோய் வந்தபின் அதனை நீக்குவதற்காக கொடுக்கப்படும் மருந்தும், சிகிச்சையும் 'நீக்கம்' என்றும், பிணியினால் உண்டாகும் இழப்புகளை ஈடு செய்வதற்கு கொடுக்கப்படும் மருந்து முறை நிறைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் உள்மருந்துகள் 32 ஆகவும், புறமருந்துகள் 32 ஆகவும் வகுக்கப்பட்டுள்ளது. நோய்களுக்கு ஏற்ப உள்மருத்துவம் மற்றும் புறமருந்துகள் தேர்வு செய்து சிகிச்சையளிக்கும்போது பிணியாளன் விரைவில் குணமடைகிறான்.

உடலின் புறப்பகுதியில் பயன்படுத்தப்படும் புறமருந்துகள் குறித்து விரிவாக காணலாம். கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, பொட்டணம், தொக்கணம், புகை, மை, பொடிதிமிர்த்தல், கலிக்கம், நசியம், ஊதல், நாசிகாபரணம், களிம்பு, நீர், வர்த்தி, சுட்டிகை, சலாகை, பசை, களி, குடோரி, முறிச்சல், கீறிகட்டல், காரம், அட்டைவிடல், அறுவை, கொம்புகட்டல், உறிஞ்சல், குருதிவாங்கல், பீச்சு என புறமருந்துகள் 32 வகைப்படுகிறது.

கட்டு: தாவரங்களின் இலைகள் அல்லது பட்டைகளை இடித்தோ, அரைத்தோ, வதக்கியோ நோயுள்ள இடங்களில் கட்டுதல் கட்டு எனப்படும். வீக்கம், திறந்த காயங்கள், சதைப்பிடிப்பு, சுளுக்கு மற்றும் எலும்பு முறிவு அல்லது விலகல் போன்ற நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. சுத்தமான பருத்தி துணியில் மருந்துகளை தடவி நோயுள்ள இடங்களை சுற்றி கட்டும்போது ரத்த ஓட்டத்தை சீராக்கி, அவ்விடம் மாசுபடுவதையும் தடுக்கிறது. சித்த மருத்துவ நூல்களில் சன்னி நோய்க்கு தலையிலும், கண் நோய்க்கு கண்ணிலும், கைகால் எரிவிற்கு உள்ளங்கை உள்ளங்காலிலும், கால் வீக்கத்திற்கு காலிலும் கட்டுதல் வேண்டும் என்று கூறப்படுகிறது.

பற்று: தாவரங்களின் இலை, பட்டை, வேர் போன்றவற்றை அரைத்து நோய்நிலைக்கேற்ப சூடு செய்தோ, சூடு செய்யாமலோ வலி மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் திண்மையாக அப்புதல் பற்று எனப்படும்.தோல் நோய்களில் உள்ள அழற்சியை போக்கவும்,மூட்டு தேய்மானம்,விரைவீக்கம் போன்ற நிலைகளில் உள்ள வீக்கத்தை குறைக்கவும், மேலும் சில கட்டிகள் போன்றவற்றை கரைக்கவும் இது பயன்படுகிறது. கழற்சி விதை பொடி, தொட்டாற்சுருங்கி, நத்தைசூரி போன்றவற்றை அரைத்து முட்டை வெண்கருவுடன் சேர்த்தோ, பச்சைப்பயிறு மா போன்றவற்றுடன் சேர்த்து அரைத்தோ பற்றிட பயன்படுத்தலாம்.

ஒற்றடம்: இது மூலிகைகளின் இலைகளையோ, கருங்கல் பாறைத்தூள், இரும்பு கிட்டத்தூள், அரிசித்தவிடு, சுண்ணாம்பு காரை, செங்கல்தூள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வறுத்து துணித்துண்டில் முடிந்து, மார்பு, தலை, கன்னம், தோள்கள், முதுகு, இடுப்பு, முழங்கால், காலடி ஆகிய இவ்விடங்களில் சூடுண்டாகும்படி ஒற்றி எடுக்கும் முறையாகும். மேற்கூறிய இடங்களில் மட்டுமல்லாமல் மூக்கு, வயிறு, தொப்புள், இரண்டு விலாப்பக்கம், இடுப்பு அரை ஆகிய இவ்விடங்களிலும் ஒற்றிடலாம்.

கம்பளித்துணி அல்லது பருத்தி துணியைக் கொதிக்கும் வெந்நீரில் நனைத்து பிழிந்து வேதனையுள்ள கட்டி, வீக்கம் இருக்கும் இடங்களில் ஒற்றடமிடலாம். மேலும் தைலங்களை நோயுள்ள இடங்களில் பூசி நொச்சி, எருக்கு, தழுதாழை, ஆமணக்கு, துத்தி, போன்ற இலைகளை ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒற்றடமிட மூட்டு வீக்கத்தை போக்கும்.

மஞ்சள், உப்பு இவ்விரண்டையும் பொட்டணமாக கட்டி கொதிக்கும் எண்ணெயில் தோய்த்து சற்று ஆறியபின் அடிபட்ட வீக்கங்களுக்கு நோயுள்ள இடங்களில் ஒற்றடம் இடலாம். இவ்வாறே எலுமிச்சம்பழத்தை இரண்டாக அரிந்து, துணித்துண்டில் முடிந்து எண்ணெயில் தோய்த்து ஒற்றடமிடலாம்.

கோதுமை தவிடை வறுத்து துணியில் முடிந்து மார்பு மற்றும் முதுகு பகுதியில் ஒற்றடமிட்டு வர மார்பு சளி கரையும். ஆமணக்கு விதை பருப்பை வறுத்து விடா வயிற்றுவலிக்கு ஒற்றடமிடலாம். மேலும் குழந்தைகளின் வயிற்று வலிக்கு ஆமணக்கு இலை, வெற்றிலை போன்றவைகளை வதக்கி ஒற்றடமிடலாம்.

பூச்சு: கொதிக்க வைத்த சில இலை இரசங்களையாவது, தைலங்களையாவது நோயுள்ள இடங்களில் பூசுவது பூச்சு எனப்படும். வேப்பிலை, மஞ்சள், குப்பைமேனி போன்ற செடிகளின் இலைகளை அரைத்து சாறெடுத்து அரிப்புள்ள இடங்களிலும், மருக்கள் உள்ள இடங்களிலும் மேல்பூச்சாக பூசி குளித்து வரலாம். சந்தனத்தை பழச்சாற்றில் அரைத்து முகப்பருக்கள் மீது பூசலாம். மேலும் மூலிகை தைலங்களை நோய்க்கு ஏற்றவாறு மேல் பூசி வரலாம். சுண்ணாம்பு தேன் கலந்து வீக்கத்திற்கு மேல் பூசலாம்.

வெள்ளரி விதை, சந்தனம், நெருஞ்சி முள் இவற்றை சம அளவு எடுத்து தாய்ப்பால் அல்லது பசுவெண்ணெய் சேர்த்து அரைத்து தொப்புள் மற்றும் அடிவயிற்றில் பூசி வர நீர்க்கடுப்பு குறைந்து நீர் வெளியேறும் .

கஸ்தூரி மஞ்சளை பொடிசெய்து இளநீர் சேர்த்து அரைத்து கால் வெடிப்புக்கு பூச்சாக பயன்படுத்தலாம்.

வேது: வெந்நீரில் நொச்சித்தழை முதலியவற்றை இட்டு அதனின்று கிளம்பும் ஆவியையாவது, செங்கலை சிவக்க காய்ச்சி நீரில் இட்டு அதிலிருந்து எழும் ஆவியையாவது பிடிப்பது ஆகும். தலையில் நீர்கோர்த்து இருந்தால் எலுமிச்சம் பழ விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை பிடிக்கலாம்.

உடல்வலிக்கு நீரை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி, அதில் உப்பு பொடியை நிரம்ப போட்டு அதிலிருந்து வரும் ஆவியை முகத்தில் படுமாறு செய்யலாம். இப்படி செய்வதால் வியர்வை உண்டாகி வேதனை தணியும். மேலும் குப்பைமேனி, மஞ்சள்தூள், துளசி, தும்பை, கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை போன்றவற்றை தேவைக்கேற்ப வேது பிடிக்க பயன்படுத்தலாம். வேது பிடிப்பதற்கு முன் சிறிது நீர் அருந்திவிட்டு பிடிக்கவேண்டும். இதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். புளியிலை, துத்தியிலை, முசுமுசுக்கையிலை இவைகளின் சாற்றை நீரில் ஊற்றி செங்கலை சிவக்க சுட்டு போட்டு மூல நோய்க்கு ஆவி பிடிக்கலாம்.

பொட்டணம்: இது சில மருந்துகளை துணித்துண்டில் பொட்டணமாக முடிந்து காது, மூக்கு, எருவாய், பெண்களின் கருவாய் ஆகிய இடங்களில் வைக்கப்படுவதாகும். சில சரக்குகளை இடித்து முடிச்சுக்கட்டி வேப்பெண்ணெய்யோ வேறு நெய்யோ சுடவைத்து அம்முடிச்சை அதில் நனைத்து நோயுள்ள இடங்களில் ஒற்றடம் போடவும் உதவும் முறையாகும்.

காதுவலி, இரைச்சல் போன்றவைக்கு பூண்டு,காயம் இவற்றை சிறு பொட்டணமாக கட்டி காதில் வைத்து வரலாம். சைனுசைடிஸ், அலர்ஜிக் ரைனைட்டிஸ் போன்ற பிரச்சினைகளில் கருஞ்சீரகத்தை ஒரு சிறு பொட்டணமாக கட்டி சிறிது நசுக்கி முகர்ந்து வரலாம். மேலும் நாவல், அத்தி, கடுக்காய் தோல் ஆகியவற்றின் பொடிகளை ஒரு சிறு துணியில் முடிந்து கருவாயில் தினம் வைத்து வர யோனி தளர்ச்சி நீங்கும்.

சம்பா அரிசி தவிடு, புண்ணாக்கு சம அளவு எடுத்து நன்றாக இடித்து வறுத்து பஞ்சு வெண்துணியில் பொட்டணம் கட்டி அளவான சூடுடன் தலையில் ஒற்றி எடுக்க ஒற்றை தலைவலி தீரும்.

தொக்கணம்: தொக்கணம் என்பது மர்த்தனம் எனப்படும். வாதத்தால் உண்டாக்கக்கூடிய நோய்கள் எல்லாவற்றையும் நீக்குவதற்கு இது பயன்படும். வெறுங்கையாலோ, தைலங்களை தடவியோ தட்டல், இறுக்கல், பிடித்தல், முறுக்கல், கைகட்டல், அழுத்தல், இழுத்தல், மல்லாத்துதல், அசைத்தல் என ஒன்பது வகையில் செய்யப்படும். இதை தொடர்ந்து செய்து வர நரம்பில் ஊறி வருத்துகின்ற வாயுக்கள், பிடிப்புகள், சுளுக்குகள் குணமாகும். இம்முறை வாதபிணியினால் எழுந்திருக்கமாட்டாத நொண்டிபோல்வனையும் எழுந்து நடக்க செய்யும். உளுந்து தைலம், விஷமுஷ்டி தைலம், சிவப்பு குக்கில் தைலம் போன்றவற்றை பயன்படுத்தி தொக்கணம் செய்யலாம்.

புகை: இது மருந்து பொருட்களை துணித்துண்டில் வைத்து திரியாகச் செய்து கொளுத்தி புகை பிடித்தல், புண் முதலியவற்றில் தாக்கும்படி செய்தல் போன்ற முறைககளில் பயன்படுகிறது. மேலும் இது அறைகளில் உள்ள நாற்றத்தை அகற்றும் வண்ணம் மணப்புகையாகவும் போடப்படுகிறது.

ஊமத்தை பூவை சுவாச நோய்களில் புகை பிடிக்க பயன்படுத்தலாம். சலதோசத்தில் மஞ்சள் கொம்பை சுட்டு அந்த புகையை பிடித்து வரலாம்.மேலும் சாம்பிராணி புகையால் தலைபாரம் குறையும்.

சுக்கு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், ஓமம் போன்றவற்றை ஆடாதோடையின் இலைச்சாற்றை விட்டு அரைத்து, அதை துணியில் தடவி திரியாக திரித்து, வெயிலில் உலர்த்தி சைனசைடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் தினம் காலை திரியை கொளுத்தி புகையை மூக்கில் பிடித்து வர நீர் வடிந்து குணம் தரும்.

மேலும் பூச்சிக்கடியில், அகஸ்தியர் குழம்பு என்னும் சித்த மருந்தை திரியாக்கி அப்புகையில் கடிவாயை காட்டி வர பூச்சிக்கடியால் உண்டாகும் எரிச்சல் மற்றும் வலி தணிவதோடு, சுற்றியுள்ள இடங்களில் சிவந்திருப்பது படிப்படியாக குறைவதை கண்ணால் காண முடியும்.

மேலும் இந்த அகஸ்தியர் குழம்பு புகையால் பல வகைப்பட்ட புண்கள், முக்கியமாக நீரிழிவினால் ஏற்பட்ட புண்களில் இருந்து நீர் வடிந்து எளிதில் புண் உலருகின்றது.

மை: இது சில மருந்து சரக்குகளை அஞ்சனக்கல் எனப்படும் சரக்கோடு சேர்த்து, இலைச்சாறு விட்டு உலர உலர அரைத்து, உலர்த்தி, பிறகு தேன்விட்டு மைபோல அரைத்துக் கொள்வதும், சில சரக்குகளை கருக்கி தேன் விட்டு அரைத்து கண்களில் மைபோல தீட்டிக் கொள்ளும் முறையாகும்.

சுக்கு, திப்பிலி, இந்துப்பு, வெள்ளைப்பூண்டு போன்ற சரக்குகளை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து மாத்திரையாக செய்து உலர்த்தி கொள்ளலாம். சன்னி போன்ற நோய்நிலையில் இம்மாத்திரையை எலுமிச்சை சாற்றில் உரைத்து மருத்துவரின் கண்காணிப்பில் மைபோல தீட்டலாம். மேலும் மாதுளை இலையை பசும்பாலில் அரைத்து கண்ணை சுற்றி பூசி வர கண்ணெரிச்சல் குணமாகும்.

- தொடரும்

Tags:    

Similar News